04.01.2015, கோவை : கோவையில் ரயிலில் இருந்து குதித்த மாற்றுத்திறனாளி வாலிபர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் கோவிந்தராஜ், 24; மாற்றுத்திறனாளி. திருப்பூரில் கார்மென்ட்ஸ் கம்பெனியில் பணியாற்றி வந்தார். காது கேட்காத, வாய் பேச முடியாதவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்து. இதில், பங்கேற்க கடந்த 30ம் தேதி நண்பர்களுடன், வாலிபர் சென்னை சென்றார். நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, ஜன., 1ம் தேதி இரவு சென்னையிலிருந்து ரயில் மூலம் திருப்பூர் புறப்பட்டார். இவருடன் வந்த நண்பர், 2ம் தேதி அதிகாலை ஈரோட்டில் இறங்கினார். திருப்பூர் ரயில்நிலையத்தில் இறங்க கோவிந்தராஜ் காத்திருந்தார். அப்போது துாக்க கலக்கத்தில் இருந்தவர், திருப்பூரில் இறங்கவில்லை.
இந்நிலையில், திடீரென எழுந்து பார்த்தபோது, வடகோவை அருகே ரயில் சென்று கொண்டிருந்தது. பதட்டமடைந்தவர், எதிர்திசையில் செல்லும் திருப்பூர் ரயிலை பிடிக்க, மெதுவாக சென்ற ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்தவரை, அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக பலியானார். சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment