30.04.2015, சென்னை
பிளஸ் 2 முடித்த செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழிப் பயிற்சி, கணினிப் பயிற்சி முகாம் சென்னை கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சகம், வேலை- பயிற்சித் துறை, ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி ஆகியவை இணைந்து நடத்தும் இந்த முகாம் தொடர்ந்து 45 நாள்கள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிலையத்தின் துணை இயக்குநர் ஜி.தங்கராஜ் கூறியதாவது:
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்கள் பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடரும்போது ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ளவும், படிக்கவும் தடுமாறுகின்றனர். அதேபோல கணினி மென்பொருள் தொடர்பானத் தகவல்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஆங்கில மொழி உச்சரிப்பு, இலக்கணம், கணினி குறித்த அடிப்படைப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஒரு பிரிவுக்கு ("பேட்ச்') 25 பேர் வீதம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
90 சதவீத வேலைவாய்ப்பு: இதுதவிர தட்டெழுத்து, கணினி, மின்சாதனப் பொருள்கள் பழுது பார்த்தல், தையல் பயிற்சி, ஸ்கிரீன் பிரிண்டிங் உள்பட 8 வகையான பயிற்சிகள் இங்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. பயிற்சி முடித்தவர்களில் 90 சதவீதம் பேர் பிபிஓ துறை உள்பட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
இந்தப் பயிற்சி முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் தாங்கள் மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றுடன் கிண்டியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
முன்னதாக உயர்தர மேம்பாட்டுப் பயிற்சி மையத்தின் இயக்குநர் கயித்தமலை, தகவல் பரிமாற்றம், கணினி அடிப்படைப் பயிற்சியைத் தொடங்கி வைத்தார்.
No comments:
Post a Comment