கோவை, 09 September 2015
மாற்றுத் திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு செய்ய வட்டாரப் போக்குவரத்து துறையினர் மறுத்து வருவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி கோவை மாவட்டத்தில் சுமார் 1.14 லட்சம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள மாற்றுத் திறனாளிகளில் 15 ஆயிரம் பேர் போக்குவரத்து பயன்பாட்டிற்காக இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வகை மாற்றம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறு வாகனங்களை இயங்கி வருபவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு ஆகியவற்றை வழங்க வட்டார போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதே நிலைதான் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் வாகனங்களுக்கு மட்டும் வாகனப் பதிவு செய்யப்படுகிறது.
பொதுவாக, இருசக்கர வாகனங்களை இயக்கும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்கள் பதிவு செய்வதற்கு முன்பாக வாகனத்தை வகை மாற்றம் செய்து, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரிடம் சான்று பெற்று பதிவு செய்தால் அவர்களுக்கு சாலை வரி மற்றும் மத்திய கலால் வரி பிடித்தம் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.ஆனால், உரிய அரசாணை இருந்தும் வகை மாற்றம் செய்த வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து துறையினர் பதிவு செய்ய மறுக்கின்றனர்.
இதேபோல, கால் செயலிழந்து நிலையில், கைகள் முழுமையாக இயக்கக் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், மருத்துவர் ஆகியோர் சான்று அளித்தாலும் ஓட்டுநர் உரிமம் வழங்க வட்டார போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர்.
இதில், வகை மாற்றம் செய்யப்பட்ட வாகனத்தை கட்டுப்பாட்டுடனும், பாதுகாப்புடனும் மாற்றுத்திறனாளிகள் இயக்க முடியுமா என்பது குறித்து மட்டுமே வட்டாரப் போக்குவரத்து துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், மருத்துவர்கள் சான்று அளித்த பின்னரும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ ரீதியாக வாகனங்களை இயக்க முடியாது என கூறி ஓட்டுநர் உரிமம் வழங்க மறுக்கின்றனர்.
இதன் காரணமாக, கோவை மாவட்டத்தில் ஒரிருவர் தவிர ஆயிரக்கணக்கானோர் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
சென்னையில் மட்டும்
சாத்தியமா?: சென்னை வட்டாரப் போக்குவரத்து துறையினர், உரிய மருத்துவச் சான்று அளிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது மட்டுமின்றி, வாகனங்களையும் பதிவு செய்து தருகின்றனர். இதே மாற்றுத்திறனாளிகளுக்கு, கோவை வட்டாரப் போக்குவரத்து துறையினர் சான்று வழங்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விபத்தில் சிக்கினால் காப்பீடு கோர முடியாது: தனிநபர் காப்பீடு செய்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கி விபத்தில் சிக்கினால் எவ்வித இழப்பீட்டுத் தொகையும் கோர முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து கேலிபர் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சூர்ய.நாகப்பன் கூறியதாவது:
தமிழக அரசு அரசாணை குறித்து உரிய சுற்றறிக்கை வழங்கியும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களை பதிவு செய்யவும், ஓட்டுநர் உரிமம் வழங்கவும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் மறுத்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக ஓட்டுநர் உரிமம் வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
மருத்துவர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் இணைந்த குழு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து ஓட்டுநர் உரிமம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
_Dinamani
No comments:
Post a Comment