FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Friday, July 20, 2018

விரைவான நீதிதான் தீர்வு...


ஜூலை 20, 2018
நாடு முழுவதும் பெண்கள், சிறுகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்று தேசிய ஆவண காப்பக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2007–ல் நாடுமுழுவதும் ஒருமணி நேரத்தில் 2 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்தது, 2016–ல் 4 கற்பழிப்புகள் நடந்திருக்கின்றன. 2016–ல் ஓராண்டில் 38 ஆயிரத்து 947 கற்பழிப்பு சம்பவங்கள் நாட்டில் நடந்துள்ளன. இதில், பாதிக்கப்பட்ட 95 சதவீதம் பேருக்கு குற்றவாளிகள் நன்றாக தெரிந்தவர்கள். அதிலும் 29 சதவீதம்பேர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள். கடந்த சிலமாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் உள்ள ‘கதுவா’ என்ற கிராமத்தில், தாங்கள் வளர்த்துவரும் குதிரைகளை தேடிக்கொண்டு காட்டுக்குள் சென்ற 8 வயது சிறுமியை, 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து, கொலையும் செய்த சம்பவம் கண்களில் கண்ணீரை வரவழைத்தது என்றால், சென்னையில் 7–வது வகுப்பு படிக்கும் 11 வயது செவித்திறன் குறைந்த சிறுமியை அவரது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ‘லிப்ட்’ ஆப்ரேட்டர்கள் தொடங்கி, 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் எல்லோருடைய நெஞ்சையும் பதறவைத்தது.

இந்தக்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சிலர் தாத்தா வயதிற்கு சமமானவர்கள். ‘லிப்ட்’ ஆப்ரேட்டரை அந்த சிறுமி ‘தாத்தா’ என்றுதான் கூப்பிட்டு வந்திருக்கிறார். போதை ஊசி மருந்துபோட்டு, கத்தியைக்காட்டி மிரட்டி, ஒரு பாவமும் அறியாத அந்தசிறுமியை இந்த காமக்கொடூரர்கள் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இந்தசம்பவம் கடந்த 7 மாதங்களாக நடந்திருக்கிறது. பெண் குழந்தைகள் தனியாக வெளியே அனுப்பப்படுவதற்கே அச்சப்படும் நிலையில், ‘‘யாரைத்தான் நம்புவதோ, பேதை நெஞ்சம்’’ என்று சொல்லும் அளவிற்கு தெரிந்தவர்கள்தான் இந்த செயலை அரங்கேற்றியிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில், புலன்விசாரணையும், வழக்குகளில் வாதமும் அமையவேண்டும். ஏனெனில், சிறுகுழந்தைகளை பாலியல் கொடுமைசெய்த வழக்குகளில் நாடுமுழுவதும் 20 சதவீதத்துக்கும் குறைவான வழக்குகளில்தான் தண்டனை கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 2017–ம் ஆண்டு மட்டும் பாலியல் குற்றங்களிலிருந்து சிறார்களை பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் 1,587 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்வதற்கும், கைதுசெய்தபின் புலன் விசாரணையை முடிப்பதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல்செய்வதற்கும் காலதாமதமாகிறது. அதன்பின்பு வழக்குகள் நடந்து தீர்ப்புவருவதற்கு நீண்டநெடுங்காலமாகிறது. நமது சட்டங்களில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், குற்றச்சாட்டுகளை முறையாக நிரூபிக்கத்தவறும் பட்சத்திலும், அந்தவழக்குகளை திறமையான வாதங்கள் மூலம் நடத்திமுடிப்பதில் ஏற்படும் குறைபாடுகளாலும், குற்றவாளிகளை தண்டிக்க முடியாமல் போய்விடுகிறது. 2012–ம்ஆண்டு நடந்த ‘நிர்பயா’ சம்பவத்தில் இன்னும் குற்றவாளிகளின் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. ஆக, குற்றம்செய்தால் உடனடி தண்டனை நிச்சயம் என்ற அச்சஉணர்வு குற்றவாளிகளுக்கு ஏற்படவேண்டும். நமது போலீசார் குற்றவாளிகளை நிச்சயமாக கண்டுபிடித்துவிடுவார்கள். நாமும் கண்டிப்பாக மாட்டிக்கொள்வோம் என்ற பயமும் இருக்கவேண்டும். ஆக, ஒவ்வொன்றுக்கும், அதாவது குற்றங்களை தடுப்பதற்கு முதலில் உரியசூழ்நிலையை உருவாக்கவேண்டும். அப்படி ஏதாவது சம்பவம் நடந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கும், புலன்விசாரணை முடிப்பதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும், வழக்குகளை நடத்திமுடிப்பதற்கும் உரியகாலக்கெடுவை நிர்ணயிப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment