மனுஷ்ய புத்திரன் |
மற்றொரு முறை
அதிர்ச்சியுடன் கேட்கிறீர்கள்
தினமும் இதுதான் நடக்கிறது
தினமும் புத்தம் புதியதாக அதிர்ச்சி அடைகிறீர்கள்
பிறகு வேறு அதிர்ச்சிகள் வந்துவிடுகின்றன
குழந்தைகளின் மாமிசங்களை
வேட்டையாடுபவர்கள் யார்?
அவர்கள் குழந்தைகளிடம்
அன்பு காட்டுகிறவர்கள்
குழந்தைகளின்
விளையாட்டு தோழர்களாய் இருப்பவர்கள்
குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறவர்கள்
குழந்தைகளின் தனிமையை போக்குகிறவர்கள்
அந்தக் குழந்தைகளை
அத்தனை கனிவாய் அணைத்துக்கொள்கிறவர்கக்
அவர்கள்தான் பிறகு
அந்தக் குழந்தைகளை
கழிவறைக்குள் அழைத்துச் சென்று
அவர்கள் ஆடைகளை
சிரித்துக்கொண்டே கழற்றுகிறார்கள்
குழந்தைகள்
தம் மாமிசங்களை புசிக்க வருபவர்களை
ஒரு நாளும் சந்தேகிப்பதில்லை
தினமும் அவர்களுக்கு
குட்மார்னிங் சொல்கிறார்கள்
குட் ஈவ்னிங் சொல்கிறார்கள்
அவர்களிடம் தங்கள் பள்ளியின்
வேடிக்கைகளை சொல்கிறார்கள்
தங்கள் பிறந்த நாள் கேக்குகளை
முதலில் அவர்களுக்கு ஊட்டுகிறார்கள்
தின்பண்டங்களை
ஒளித்துகொண்டு வந்து தருகிறார்கள்
” அங்கிள்
அண்ணா
தாத்தா
மாமா ” என
எத்தனையோ
உரிமையுள்ள பெயர்களால்
அழைக்கிறார்கள்
ஒரு அண்ணா
ஒரு சிறுமியைபுணர
ஒரு அங்கிளை அழைத்துவருகிறான்
ஒரு அங்கிள் ஒரு தாத்தாவோடு
ஒரு பழைய சாமான் அறைக்குள்
அந்தச் சிறுமியை அழைத்துச் செல்கிறான்
ஒரு மாமா அச்சிறுமி புணரப்படுவதை
செல்போன் கேமிராவில் படமெடுக்கிறான்
பிறகு அந்தப்படம் அந்தச்சிறுமிக்கு
காட்டப்படுகிறது
எல்லாம் எங்கோ தொலைவில் நடக்கவில்லை
ஒரு காது கேளாத சிறுமியை
அவளது வீட்டிலேயே
அவளது பெற்றோர் கண்ணில் படாமல்
இருபத்திரெண்டு பேர்
ஏழு மாதங்களாக புணர்கிறார்கள்
நமக்கு அருகாமையில்தான் நடக்கிறது
அடுத்த ஊரில் நடக்கிறது
அடுத்த தெருவில் நடக்கிறது
அடுத்த வீட்டில் நடக்கிறது
அடுத்த அறையில் நடக்கிறது
நம் அறையிலேயே கூட நடக்கிறது
சிறு விசும்பல்கூட கேட்தில்லை
சிறு அலறல்கூட கேட்பதில்லை
அந்தச் சிறுமியைபோல
கடைசி நிமிடம் வரை
நாமும் காதுகேளாதவர்களாகத்தான் இருக்கிறோம்
பிறகு யாரோ சிலரை கல்லால் அடிக்கவேண்டும் என்று சொல்கிறோம்
இந்த உலகமே சீக்கிரம் ஒரு நாள்
ரத்தகறையுள்ள
கற்களால் நிரம்பிவிடும்
இந்த உலகம் ஏன் இவ்வளவு
வெட்டவெளியாய் இருக்கிறது?
ஒரு குழந்தை பாதுகாப்பாய் ஒளிந்துகொள்ள
ஒரு சிறிய மறைவிடத்தைகூடவா
நம்மால் உருவாக்க முடியவில்லை?
குழந்தைகளிடம் அன்பு செலுத்தும்
ஒவ்வொரு மனிதனையும் கண்டு நான் சஞ்சலமடைகிறேன்
குழந்தைகளை பிரியமாய் தொடும்
ஒவ்வொரு கரத்தையும் நான் சந்தேகிக்கிறேன்
எனக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை
குழந்தைகளின் நம்பிக்கைக்குரியவர்களால்
இருட்டறைகளில் புணரப்படும்
ஆயிரம் ஆயிரம் குழந்தைகளின்
தீனக்குரல்கள் தலைக்குள் வெடிக்கின்றன
எனக்கு ஒரு அவசர வேலை இருக்கிறது
ஐந்து நிமிடங்கள்
ஐந்தே ஐந்து நிமிடங்கள்
என் குழந்தையை எங்கே விட்டுச் செல்வேன்?
யாரின் கைகளில் அவள் பாதுகாப்பாய் இருப்பாள்?
17.7.2018
மாலை 6.59
மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment