29.12.2024 சென்னை: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் 205 குழந்தைகளுக்கு காக்லியர் கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறன் கிடைத்துள்ளது. பொதுவாக 1000 குழந்தைகளில் 7.5 குழந்தைகளுக்கு பிறவியில் இருந்தே காது கேட்காத நிலை உள்ளது. இந்த குறையை காக்லியர் கருவி (cochlear implant) மூலம் தீர்க்க முடியும். இந்த காக்லியர் கருவி என்பது காதுகள் அருகில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் வைக்கப்படும் ஒரு சிறிய மின்னணு சாதனமாகும்.
இந்த சாதனமானது ஒலி உணர்வை வழங்குவதற்கும், கேட்பதற்கும் காக்லியர் நரம்பைத் தூண்டும். காக்லியர் கருவியைப் பொருத்தும் அறுவை சிகிச்சை மூலம் கேக்கும் திறன் கிடைக்கும். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கும் 6.5 லட்சம் வரை செலவாகும் நிலையில் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: பிறப்பு முதல் காது கேட்காத குழந்தைகள் உலகத்துனுடைய சத்தங்களை கேட்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனை சரி செய்வதற்காக தமிழ்நாட்டில் காக்கிலியர் கருவி அந்த குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 3.1 லட்சம் குழந்தைகள் தமிழகத்தில் பிறந்துள்ளது.
இவர்களை பரிசோதனை செய்ததில் 406 குழந்தைகளுக்கு காது கேட்காத நிலை இருந்துள்ளது. தற்போது 205 குழந்தைகளுக்கு இந்த அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. 170 குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். மீதுமுள்ள 31 குழந்தைகளுக்கு வரும் ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment