அண்மையில் வெளியான "எலி' திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் இடம்பெற்றுள்ள வசனத்தை நீக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுதொடர்பாக சென்னையில் உள்ள மத்திய திரைப்பட தணிக்கைத் துறை அலுவலகத்துக்கு அந்தக் கூட்டமைப்பு அனுப்பிய கடித விவரம்:அண்மையில் வெளியிடப்பட்ட "எலி' தமிழ்த் திரைப்படத்தில் வரும் சிறைச்சாலைக் காட்சியில் "நீங்கதான் ஊமை என்று நினைச்சா, என்னை ஊமையாக்கிட்டீங்களே' என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. அந்தக் காட்சிக்கு இந்த வசனம் தேவையே இல்லை என்பதோடு, மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
மத்திய திரைப்பட தணிக்கை சான்றிதழ் சட்டப் பிரிவு (3)பி-இல் இதுபோன்று மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் வசனங்கள் இடம்பெறக் கூடாது எனக் குறிப்பிடப்படிருந்தும், தணிக்கைக் குழு இதை அனுமதித்துள்ளது மாற்றுத் திறனாளிகளிடையே மன சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, திரைப்படத்தில் அந்த வசனத்தை நீக்க வேண்டும்; மேலும், தொலைக்காட்சிகளில் இந்தத் திரைப்பட விளம்பரத்தில் இடம்பெற்று வரும் இந்த வசனத்தையும் நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment