சிவகங்கையில் பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது:
உடல் இயக்க குறைபாடு உடையவர்களுக்கு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அவர்கள் சொல்வதை எழுதுபவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஆனால் காது கேளாத, வாய் பேசாதவர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்ய இயலாது. அவர்களின் நிரந்தர ஊனத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் தேர்ச்சி பெற தேவையான மதிப்பெண் வழங்க வேண்டும்.
அறிவுசார் குறைபாடு, முடக்கு வாத பாதிப்பு, கை செயலிழப்பு, புற உலக சிந்தனை, உடல் இயக்க குறைபாடு, பன்முக குறைபாடு, மனநலம் சார்ந்த குறைபாடு, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் திடீர் விபத்துகளால் ஏற்படும் கை முறிவு போன்ற தற்காலிக பாதிப்பு உடையவர்களுக்கும் சொல்வதை எழுதுபவர் அதாவது அதே பாட ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு எழுதும் நடைமுறை பின்பற்றப்படுகிறது.
பிறவியிலேயே சில மாணவர்கள் காது கேட்காமல் வாய் பேசாமலும் இருப்பதால் அவர்களுக்குச் சொல்வதை எழுதுபவர் போன்ற சலுகைகள் கிடைக்கப் பெறுவதில்லை. கூடுதல் ஒரு மணி நேரம் தேர்வு எழுத மட்டும் ஒதுக்கப்படுகிறது. இதனால் பயனில்லை.
காது கேளாதவருக்கு அறுவை சிகிச்சை செய்து காது கேட்கும் கருவி பொருத்தப்படுகிறது. பெரும்பாலானவருக்கு அவ்வாறு பொருத்தப்படும் கருவி செயலிழந்து விடுவதால் எப்பயனும் கிடைக்க பெறுவதில்லை. மீண்டும் அறுவை சிகிச்சை செய்வதின் அபாயம் கருதி பெற்றோர்களும் தயக்கம் காட்டுவதால் நிரந்தர குறைபாடாக காது கேளாமை உள்ளது. எனவே தமிழகம் முழுவதும் காது கேட்காத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெற தேவையான குறைந்தபட்சம் 35 சதவீதம் மதிபெண்கள் வழங்கிட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment