30.09.2018
காதுகேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் இணைக்க வசதியாக, தேர்தல் அலுவலர்களுக்கு, 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. அடுத்தாண்டு, 'லோக்சபா' தேர்தல் நடப்பதால் நாடு முழுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி முடிந்துள்ளது. தகுதியான அனைத்து வாக்காளரும் அணுகும் வகையில், தேர்தல் நடவடிக்கை அமைய வேண்டுமென தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.முதியோர், மாற்றுத்திறனாளிகளையும் பட்டியலில் இணைத்து, ஜனநாயக கடமையாற்ற செய்வது என, திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து ஓட்டளிக்க செய்ய, சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்காக, பட்டியலில் இல்லாத தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பயிற்சி அளித்து, பட்டியலில் சேர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக, தேர்தல் அலுவலர், பணியாளருக்கு 'சைகை' மொழி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தாசில்தார்கள் கூறுகையில், 'காதுகேளாத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அலுவலர்கள், 'சைகை' மொழியை கற்க வேண்டியுள்ளது. 'சைகை' மொழி பயிற்சி நிபுணர்களை அழைத்து, மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளை தேடிச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி, இம்மாத இறுதிக்குள், பெயரை பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment