29.06.2017, சேலம்: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி, சேலம் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வரும் ஜூலை 6ம்தேதி தொடங்கி, 21ம் தேதிவரை நடக்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது. இந்த விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சம்பத் தலைமையில் நேற்று நடந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம், பிறந்தது முதல் 18 வயது கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. வரும் 6ம் தேதி முதல், 21ம் தேதி வரை மாவட்டத்திலுள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இந்த முகாம், நடைபெறவுள்ளது.
முகாமில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, காது கேளாத மாணவர்களை கண்டறிந்து அடையாள அட்டை, குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ள காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படவுள்ளது.
காது, மூக்கு, தொண்டை மருத்துவர், எழும்பு முறிவு மருத்துவர், கண் மருத்துவர், மனநல மருத்துவர், நரம்பியல் மருத்துவர், பொது மருத்துவர் ஆகிய மருத்துவர்கள் இந்த முகாமில் பங்கேற்கவுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில், சிஇஓ ஞானகவுரி, திட்டஅலுவலர் ஈஸ்வரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அமுதவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment