09.11.2016
சேலம்: காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான மத்திய அரசின் உத்தரவை, துரிதமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனர் பிரியங்பாரதி, மாநில அரசுகளின் போக்குவரத்து செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வாகனம் ஓட்ட, பார்வை செயல்பாடே முக்கியம். காது கேட்கும் திறன், சிறிதளவே சம்பந்தப்பட்டதாக உள்ளது. வளர்ந்த நாடுகளில், வாய் பேசாத, காது கேளாதோருக்கு, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. காதுகேட்கும் கருவி அல்லது காக்ளியர் சிகிச்சை செய்து கொண்டவர்கள், கேட்கும் திறனை, மேம்படுத்திக்கொள்ள முடியும். கேட்கும் திறனை இழந்தவர்கள், ஓட்டும் திறமையை இழக்க முடியாது என்பதை, கண்டிப்பாக ஏற்க வேண்டும். வேண்டுமானால், கேட்கும் திறன் இல்லாதவர் என்பதை, குறியீட்டின் மூலம் தெரியும்படி, வாகனத்தில் குறிப்பிடலாம். ஓட்டுனர் உரிமம் வழங்க கடைபிடிக்கப்படும் விதிகளை, காது கேட்காதவர்களின் விண்ணப்பங்களில், கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அவர்களது விண்ணப்பங்களை, போக்குவரத்து சட்டம், 1988 பிரிவு 8(4)ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில பொது செயலர் நம்புராஜன் கூறுகையில், ''மத்திய அரசின், இந்நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இந்த உத்தரவை, தமிழகத்தில் விரைந்து செயல்படுத்தி, காது கேட்காத, வாய் பேச இயலாதவர்களுக்கு, தாமதப்படுத்தாமல் ஓட்டுனர் உரிமம் வழங்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
No comments:
Post a Comment