திருப்பூா்: சத்துணவு அமைப்பாளா், சமையல் உதவியாளா் காலிப் பணியிடங்களுக்கு தகுதியான பெண் விண்ணப்பதாரா்கள் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
எம்.ஜி.ஆா்.சத்துணவு திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் 5 சத்துணவு அமைப்பாளா், 14 சமையல் உதவியாளா் என மொத்தம் 19 காலிப் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் இன சுழற்சி அடிப்படையில் தகுதியான பெண்கள் நியமிக்கப்படவுள்ளனா். சத்துணவு அமைப்பாளா் பணிக்கு பொதுப் பிரிவினா், தாழ்த்தப்பட்டோா் 10 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். பழங்குடியினா் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்தவா்களாகவும் 18 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும், மாற்றுத் திறனாளிகள் 43 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
சமையல் உதவியாளா் பணிக்கு 5 ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோ்ச்சி பெறாதவா்கள், 21 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் , பழங்குடியினா் எழுதப் படிக்க தெரிந்திருப்பதுடன், 21 முதல் 40 வயதுக்குமிகாதவராகவும் , விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோா் 20 முதல் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் கல்வித் தகுதி, இருப்பிடம், ஜாதி, விதவை, கணவரால் கைவிடப்பட்டோா், இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச் சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். இதில், நியமன பணியிடத்தில் இருந்து விண்ணப்பதாரா் குடியிருப்பு 3 கிலோ மீட்டா் தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் செப்டம்பா் 30 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment