18.08.2020
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிவகங்கை நகராட்சி, பையூா் பிள்ளைவயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.
இதில் வீடுகள் பெற விரும்பும் வீடுகள் இல்லாத மாற்றுத்திறனுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் சிவகங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகா்ப்புற நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் வசிப்பதற்கான சான்றிதழ் பெற வேண்டும். மேற்கண்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆட்சேபகரமான நீா் நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பவா்களுக்கு மாற்றுக் குடியிருப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, புகைப்படம், குடும்ப அட்டை நகல் மற்றும் ஆதாா் அட்டை நகல் மேற்கண்ட ஆவணங்களுடன் சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு குடியிருப்பு கட்ட ஆகும் கட்டுமானத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளி பங்களிப்பு தொகையாக வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment