திருவொற்றியூர்:சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.
No comments:
Post a Comment