ஓம் டிவைன் கான்சியஸ்னெஸ் அமைப்பு சார்பில் சென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற காது கேளாத, வாய் பேச முடியாதவர்களுக்கான நவீன சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள். |
இந்த அமைப்பின் சார்பில் சென்னை வேப்பேரியில் நேற்று நடந்த நவீன சுயம்வரம் நிகழ்ச்சிக்கு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திருமண வயதைத் தொட்ட, திருமண வயதைத் தாண்டிய ஆண்களும், பெண்களும் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர். இவர்கள் அனைவரும் காது கேளாத, வாய் பேச முடியாத, சரியாக நடக்க முடியாத பகுதி ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள்.
இவர்களைப் பற்றியும், இவர்களது குடும்பம் மற்றும் வருமானம், எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை அவர்களது பாணியிலேயே விளக்கி மணமகன் மற்றும் மணமகளை அறிமுகம் செய்து வைத்தனர் சைகை நிபுணர்கள் விஜயலட்சுமியும், வினோத்தும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு மற்றும் தனித்திறன் போட்டிகளில் முத்திரை பதித்து பிரதமர் கையால் தேசிய அளவில் பரிசு மற்றும் பாராட்டுக் கேடயம் பெற்ற சென்னை போரூரைச் சேர்ந்த இளம்பெண் நிவேதிதாவின் பெற்றோர் இளையபாரதி- வனிதா கூறும்போது, ‘‘எங்கள் மகளுக்கு உள்ள இந்த குறைபாடுகளை நாங்கள் ஒரு குறையாக நினைத்தது இல்லை. பிரதமர் கையால் விருது வாங்கி அவர்தான் எங்களுக்கு பெருமை சேர்த்திருக்கார். எங்களைப் போன்ற பெற்றோரின் மனக்குறையை ஓம் டிவைன் அமைப்பு தீர்த்து வைத்துள்ளது’’ என்றனர்.
சரளமாக பேச மட்டும் முடியாது என்ற குறைபாடு உடைய டிசிஎஸ் நிறுவனத்தில் கைநிறைய சம்பாதிக்கும் இளம்பெண் ரோஸி, எந்தக் குறையும் கிடையாது, ஆனால் மணந்தால் வாய் பேசாத, காது கேளாத ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணைத்தான் மணப்பேன் என வைராக்கியமாக இருந்து வரும் வேலூர் இளைஞர் கார்த்திக் போன்றவர்கள் இந்த சுயம்வரத்தின் சிறப்பு விருந்தினர்கள்.
இந்த நவீன சுயம்வரம் குறித்து ‘தி இந்து’விடம் பேசிய சென்னை தி.நகர் ஓம் டிவைன் கான்சியஸ்னெஸ் அமைப்பின் நிர்வாகி ஆர்.மோகன கிருஷ்ணசுவாமி, ‘‘வாய் பேசாத, காது கேளாத இவர்களை இந்த சமூகம் புறக்கணித்துவிடக் கூடாது என்பதற்காக எங்கள் அமைப்பு போராடி வருகிறது. கும்பகோணத் தில் ஒரு குடும்பத்தில் கண்ட ஒரு நிகழ்வுதான் என்னை மனதளவில் பாதித்தது. அதன்பிறகு கடந்த 4 ஆண்டுகளாக இவர்களுக்கும் சொந்த செலவில் சுயம்வரம் நடத்தி இலவச திருமணமும் செய்து வைத்து வருகிறோம்.
இங்கு ஜாதி, சமயம், அந்தஸ்து ஆகியவை தடைக் கற்கள் கிடையாது. இதுவரை நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளி ஜோடிகள் எங்கள் அமைப்பின் மூலம் தம்பதிகளாகி உள்ளனர். இன்னும் உதவி கிடைக்காத பலருக்கு நல்ல மேடையாக இருக்க விரும்புகிறோம். தவிர வாரம்தோறும் அன்னதானமும் அளித்து வருகிறோம்” என்றார்.
No comments:
Post a Comment