06.06.2016, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் நந்தகுமாரிடம் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தின் மாநில துணைசெயலாளர் சையது முஸ்தபா ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை வங்கிகளின் ஏஜெண்டுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் மாதத்தில் ஒரு நாளில் மட்டும் வழங்கப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாளில் வாங்க தவறினால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு வங்கி அலுவலர்கள் குறிப்பிடும் நாளில் சென்று உதவித்தொகை பெற வேண்டும். இதனால் மாற்றுத்திறனாளிகள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். மேலும் உதவித்தொகை விடுபடும் மாதங்களில் அவர்களால் விவரங்கள் அறிந்து கொள்ள மிகவும் சிரமமாக உள்ளது. இதுசம்பந்தமாக ஏஜெண்டுகளுக்கும் விவரம் தெரிவது இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். எனவே மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கி சேமிப்பு கணக்கு தொடங்கி அதில் நேரடியாக உதவித்தொகை செலுத்த ஆவண செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். உதவித்தொகை புதிதாக பெறுபவர்கள் வட்டாட்சியரிடம் மனு செய்து பதில் பெற 5,6 மாதங்கள் ஆகிறது. மீண்டும் வட்டாட்சியரை அணுகும் போது புதிதாக மனு அளிக்கும் படி கேட்கிறார்கள். எனவே ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி உதவித்தொகை முகாம் நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment