17.06.2016, சென்னை:மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விலக்கு அளித்துள்ளது.
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், கார் போன்ற மாற்றுத் திறனாளி வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 'மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.இந்நிலையில், ஜூன், 13 முதல், மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது பெரிதாக பயன் அளிக்காது என, மாற்றுத் திறனாளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் கூறியதாவது: ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு கட்டணச் சலுகை உள்ளது. தற்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகை என்றால், மாற்றி வடிவமைக்கப்பட்ட கார்கள் என, கருதலாம். இவ்வாறு, கார் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழகத்தில், 100 பேர் கூட இருக்க வாய்ப்பில்லை.
கார் இல்லாத, கார் ஓட்டத் தெரியாத மாற்றுத் திறனாளிகள் வாடகை கார், மற்றவர்களின் கார்களை பயன்படுத்துவர். மாற்றுத் திறனாளிகள் செல்லும் அனைத்து கார்களுக்கும் சலுகை என, அறிவித்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment