19.06.2016, புதுடெல்லி: சண்டிகரில் நாளை நடைபெறும் மெகா யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இதில் 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் இந்த நாளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யோகா தினத்தையொட்டி நாளை சண்டிகரில் நடைபெறும் மெகா யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்ந நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் 150 பேர் பங்கேற்கிறார்கள். மாற்றுத் திறனாளிகளை குறிக்கும் வகையில் திவ்யங்ஸ் என்ற வார்த்தையை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார். நாளை நடைபெறும் இந்த யோகா தின நிகழ்ச்சியில் காது கேளாத, வாய் பேசாத, பார்வை இழந்த மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர். மேலும் கைகால்களை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 18 பேரும் சக்கர நாற்காலியுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இது தவிர இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆயிரம் பேரும் சண்டிகரில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஒரு மாதமாக சண்டிகரில் உள்ள அறிவுசார் மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு நிறுவனம் (கிரிட்) சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் யோகா குரு ராம்தேவ் பங்கேற்கும் யோகா தின நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. அங்குள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சுமார் 3 ஆயிரம் எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். இதே நாளில் நாடு முழுவதும் மத்திய ரிசர்வ் போலீஸ், சிஐஎஸ்எப், எஸ்எஸ்பி உள்ளிட்ட பல்வேறு படை பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் வீரர்கள் யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.
Good deaf
ReplyDelete