27.06.2016, சென்னை: மதுராந்தகத்தில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி பார்வையற்றவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மதுராந்தகம் அடுத்த பாக்கம், தாதங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. விவசாயி. இவரது மகள் உகந்தாய் (30). திருப்பத்தூரை சேர்ந்தவர் குழந்தையப்பன். இவரது மகன் தருமன் (34). இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். தன்னம்பிக்கை முகாம்களில் பங்கேற்றபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதையடுத்து தருமன் உகந்தாயை திருமணம் செய்துகொள்ள விரும்பினார். இதற்கு அவரது வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். தன்னை காதலியோடு சேர்த்து வைக்க பெற்றோரை தருமன் வலியுறுத்தினார். அதற்கு அவர்கள், ‘‘உனக்கும் கண் தெரியாது. பார்வையற்ற பெண்னை திருமணம் செய்து கொண்டு என்ன செய்வாய்? எனக்கூறி திருமணத்திற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளனர்.
இந்நிலையில், பெற்றோரின் எதிர்ப்பை மீறி மதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் அருகே இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தில் தருமன் வீட்டார் கலந்து கொள்ளவில்லை. பெண் வீட்டார் மட்டும் வந்திருந்தனர். ராமர் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும், புதுமண தம்பதியை வாழ்த்தி சென்றது, நெகிழ்ச்சிகரமாக இருந்தது. புது மாப்பிள்ளை தருமன் கூறியதாவது: ஆசிரியர் பயிற்சி முடித்து விட்டு, சென்னை புறநகர் ரயிலில் வியாபாரம் செய்து வருகிறேன். எங்களது திருமணத்திற்கு வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்கவில்லை. அதனால், கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பக்தர்களின் வாழ்த்து, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான புதிய நம்பிக்கையை எங்களுக்கு தந்துள்ளது. எனது மனைவியை சந்தோஷமாக வைத்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment