15.06.2016, மாற்றுத்திறனாளிகளின் உற்பத்திப் பொருள்களை நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் சி.கே.சந்தோஷ், பொதுச் செயலர் பொன்.சண்முகம் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் உற்பத்தி செய்யும் ஊதுவத்தி, சோப்பு, பினாயில், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருள்களை தமிழக அரசு பெற்று அதனை நியாயவிலைக் கடைகள் மூலமாக விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர வருவாய் கிடைத்திட வாய்ப்பு கிட்டும்.
மேலும், பேருந்து நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளின் உற்பத்தி பொருள்களை விற்பனை செய்திடும் வகையில் தனிக்கடைகள் வழங்கிட வேண்டும். கடலூரில் மாற்றுத்திறனாளிகள் தங்கி தொழில் செய்திடும் வகையில் தனி விடுதி ஏற்படுத்த வேண்டும். மேலும், அவர்கள் தொழிற்பயிற்சி மேற்கொள்ள தனியாக தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைத்திட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்கிட ஏதுவாக வங்கிகளில் ரூ.1 லட்சம் வரையில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தட்சிணாமூர்த்தி, நிர்வாகிகள் தணிகவேல், தில்லைநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment