திருப்பூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 98 பேருக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டது.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலைப் பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதன்படி, ஏராளமான பெண்கள் மற்றும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்றனர்.
பின்னலாடை உற்பத்தி உள்பட 16 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களது நிறுவனத்துக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்தனர். முகாமில் மொத்தம் 188 பேர் பங்கேற்றனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 98 பேருக்கு பணி நியமன கடிதங்களை திருப்பூர் ஆட்சியர் ச.ஜெயந்தி வழங்கினார். திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காளிமுத்து இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
No comments:
Post a Comment