19.03.2016, சென்னை,
தனித்து செயல்படக்கூடிய திறன்கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக பயணம் செய்யும் பாதுகாவலருக்கு பயணச்சலுகை வழங்க முடியாது என்று கூறிய ரெயில்வே அமைச்சகத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அடிப்படை வசதிகள்
சென்னை ஐகோர்ட்டில், ராஜீவ்ராஜன் என்பவர் ஒரு பொதுநல வழக்கை கடந்த 2005-ம் ஆண்டு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மாற்றுத்திறனாளிகளுக்கு விமானம், பஸ், ரெயில் பயணங்களின்போது சலுகைகள், வசதிகள் வழங்கவேண்டும். விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் சில அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு சில உத்தரவுகளை கடந்த 2006-ம் ஆண்டு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள ஒரு அம்சத்தை மட்டும் எதிர்த்து ரெயில்வே அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
சலுகை வழங்க முடியாது
அந்த மனுவில், ‘2006-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி இந்த ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்புக்காக வரும் பாதுகாவலருக்கும் ரெயில் பயணத்துக்கான சலுகைகளை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், பிறர் உதவி இல்லாமல் பயணம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாளராக வரும் நபர்களுக்கு பயணத்தின்போது சலுகை வழங்கலாம். ஆனால், பிற உதவியில்லாமல் தனியாக பயணம் செய்யக்கூடிய மாற்றுத்திறனாளிகளுடன் வரும் நபருக்கு இந்த சலுகை வழங்க முடியாது. இது ரெயில்வே அமைச்சகத்தின் கொள்கை முடிவு மற்றும் நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும்’ என்று கூறப்பட்டு இருந்தது.
அசவுகரியம்
இந்த வழக்குகளின் ஆவணங்கள் பல ஆண்டுகளாக மாயமாகிவிட்டது. பின்னர், அந்த ஆவணங்கள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ரெயில்வே அமைச்சகம் தாக்கல் செய்துள்ள இந்த மனு அபத்தமாக உள்ளது. பிறருடைய உதவி இல்லாமல் தனியாக பயணம் செய்யும் திறன் கொண்டுள்ள மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், அவர்கள் தனியாக பயணம் செய்யும்போது சில அசவுகரியம் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு உதவும் விதமாக ஒருநபர் உடன் பயணம் செய்தால், அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். எனவே, ரெயில் பயணங்களில் பாதுகாவலராக வரும் நபருக்கும் சலுகைகளை வழங்கவேண்டும். இந்த நடைமுறைதான் உலகம் முழுவதும் உள்ளது.
அபராதம்
மாற்றுத்திறனாளிகளாக இருந்தாலும், அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு வழிவகை செய்து தரப்படவேண்டும். ரெயில்வே அமைச்சகத்தின் இந்த முடிவு, மாற்றுத்திறனாளி சமவாய்ப்பு, உரிமை பாதுகாப்பு மற்றும் முழு பங்களிப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளன.
இந்த விவகாரத்தில் ரெயில்வே அமைச்சகம் தவறாகவும், சட்டத்துக்கு எதிராகவும், தன் மனதை செலுத்தாமலும் இந்த முடிவை எடுத்துள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம். ரெயில்வே அமைச்சகத்துக்கு ரூ.10 ஆயிரம் வழக்கு செலவு விதிக்கிறோம். இந்த தொகையை மனுதாரர் ராஜீவ்ராஜன் நடத்தும் ‘ஏக்தா’ என்ற தன்னார்வ அமைப்புக்கு 15 நாட்களுக்குள் தெற்கு ரெயில்வே நிர்வாகம் வழங்கவேண்டும்.
அறிக்கை
மேலும், இந்த வழக்கில் 2006-ம் ஆண்டு இந்த ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை தெற்கு ரெயில்வே அமல்படுத்தியுள்ளதா? என்பதை சரிபார்க்க மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், வக்கீல் தமிழ்மணி என்பவரையும் நியமிக்கிறோம். ஒருவேளை தெற்கு ரெயில்வே உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என்றால், அவற்றை அமல்படுத்த ஒரு திட்டத்தை 15 நாட்களுக்குள் உருவாக்கவேண்டும். பின்னர் அவற்றின் விவரத்தை அறிக்கையாக வருகிற ஏப்ரல் 27-ந் தேதி தாக்கல் செய்யவேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment