06.03.2016, சன்டிகர்: வழி தவறி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமியை எல்லை பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைத்தனர். பாகிஸ்தானை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத 5 வயது சிறுமி ஒருவர் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு இந்திய எல்லைக்குள் நுழைந்தார். அவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அபோஹார் செக்டருக்குள் நுழைந்து எல்லை பாதுகாப்பு படையினரின் வேலிக்கு அருகில் வந்துவிட்டார். இதை பார்த்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தபோது தான் அவருக்கு வாய் பேசவும் முடியாது, காதும் கேட்காது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாகிஸ்தான் வீரர்களை அணுகி மதியம் 2 மணிக்கு சிறுமி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து எல்லை பாதுகாப்பு படை டிஐஜி கடாரியா கூறுகையில், பாகிஸ்தான் சிறுமி தவறுதலாக இந்திய எல்லைக்குள் வந்துவிட்டார். அபோஹார் செக்டரில் உள்ள நாதா சிங் வாலா சோதனைச்சாவடி அருகே வந்த சிறுமி நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் என்றார்.
No comments:
Post a Comment