12.03.2016, ஈரோடு
ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கு 25–க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள், பஸ் பயண சலுகை அட்டை பெரிதாக இருப்பதாக கூறி பொதுமேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்துக்கு ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனுடையோர் நலச்சங்கத்தின் தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார்.இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி இம்தியாஸ் அகமது சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘எங்களுக்கு வழங்கப்படும் பஸ் பயண சலுகை அட்டை மிகவும் பெரிதாக உள்ளது. இதை சட்டைப்பையில் வைத்து எடுத்துச்செல்ல மிகவும் சிரமமாக இருக்கிறது. எனவே மற்ற மாவட்டங்களில் வழங்கப்படுவதுபோல ஈரோடு மாவட்டத்திலும் அட்டைக்கு பதிலாக, இலவச பஸ் பயண சலுகை புத்தகம் வழங்கவேண்டும்’ என்றார்கள்.
அதற்கு அவர், ‘அடுத்த மாதம் முதல் பஸ் பயண சலுகை, புத்தக வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment