29.12.2015, நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் குரூப்-சி, குரூப்-பி நிலையிலான பணியிடங்கள் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் மூலமாக நிரப்பப்படுகின்றன. சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உள்பட நாடு முழுவதும் இயங்கி வரும் 21 ரயில்வே பணியாளர் தேர்வு வாரியங்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டு போட்டித் தேர்வுகளை நடத்திவருகின்றன.
அந்த வகையில், தற்போது, தொழில்நுட்பம் அல்லாத பணிகள் என கருதப்படும் கமர்சியல் அப்ரண்டீஸ், டிராபிக் அப்ரண்டீஸ், உதவி ஸ்டேஷன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, விசாரணை மற்றும் முன்பதிவு எழுத்தர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 18,252 காலியிடங்களை நிரப்புவதற்கு ஒட்டுமொத்தமாக அனைத்து ரயில்வே தேர்வு வாரியங்களும் ஒருங்கிணைந்த பணிநியமன அறிவிப்பை
வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சென்னை ரயில்வே பணியாளர் தேர்வாணையத்துக்கு விண்ணப்பித்தால் போதும். விருப்பமான எந்த வாரியத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்றாலும் ஏதேனும் ஒரு தேர்வு வாரியத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்டவாரியங்களுக்கு விண்ணப்பித்தால் அந்த விண்ணப்பங்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படும்.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு படித்திருக்கவேண்டும். வயது 18 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி வகுப்பினர் எனில் 5 ஆண்டுகளும்,ஓபிசி பிரிவினர் என்றால் 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் எனில் 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. ஆன்லைன் வழியிலான எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியுடையோர் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
கணினி மூலம் நடத்தப்படும் ஆன்லைன் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். இந்தத் தேர்வில் தவறான பதில்களுக்கு மைனஸ்மார்க் போடப்படும். அதாவது 3 கேள்விகளுக்கு தவறாக விடை அளித்தால், ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.
உதவி ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு மட்டும் கூடுதலாக ஆப்டிடியூட் டெஸ்ட் இருக்கும். அதேபோல், தட்டச்சர் பதவி சம்பந்தப்பப்பட்ட பணிகளுக்கு தட்டச்சு செய்யும் திறன் பரிசோதிக்கப்படும்.தேர்வெழுத விரும்பும் பட்டதாரிகள் ஜனவரி மாதம் 25-ந் தேதிக்குள் ஆன்லைனில் (www.rrbchennai.gov.in ) விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment