07.07.2016, ஜோகன்னஸ்பர்க்: காதலி ரீவா ஸ்டீன்கேம்ப்பை சுட்டுக் கொன்ற வழக்கில், பிரபல தடகள வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. தென் ஆப்ரிக்காவை சேர்ந்த பிஸ்டோரியஸ் (29 வயது), மாற்றுத் திறனாளி தடகள வீரர். முழங்கால் மூட்டுக்கு கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையில், செயற்கை கால்களுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்த அவர் ‘பிளேடு ரன்னர்’ ஆக உலகப் புகழ் பெற்றார். தனது காதலியும் மாடல் அழகியுமான ரீவா ஸ்டீன்கேம்ப்புடன் வசித்து வந்த அவர், கடந்த 2013ம் ஆண்டு ரீவாவை சரமாரியாக சுட்டுக் கொன்றார்.
விசாரணையில், வீட்டுக்குள் திருடன் புகுந்துவிட்டதாக தவறாகக் கணித்து பதற்றத்தில் சுட்டுவிட்டதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், பிஸ்டோரியசுக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர். அவர் உடனடியாக ஜெயிலுக்கு அனுப்பட்டார். மேல் முறையீடு செய்யும் வாய்ப்பு இருந்தாலும், அப்பீல் செய்யப் போவதில்லை என்று பிஸ்டோரியஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment