20.07.2016, கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தத் தேர்வை மாவட்ட ஆட்சியர் (பொ) கோ.விஜயா தொடங்கி வைத்து கூறியதாவது: மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் நடப்பு நிதியாண்டில் மோட்டார் பொருத்திய 125 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த தையல் இயந்திரங்களைப் பெறுவதற்கான தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில், அரசு மருத்துவர்கள், தொழில்நுட்ப அலுவலர்கள் பங்கேற்று மாற்றுத் திறனாளிகளின் தொழில் திறன், தையல் பயிற்சி மற்றும் ஊனத்தின் அளவையும் பரிசோதித்து தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மூலமாக விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். மாவட்டத்தில் இதுவரை மோட்டார் பொருத்திய 325 தையல் இயந்திரங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர். நிகழ்ச்சியில், அரசு மருத்துவர்கள் ஏ.என்.பரிமேலழகன், இள.தமிழரசன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஆர்.பாலாஜி, அரசினர் பயிற்சி மைய முதுநிலை தொழில்நுட்ப அலுவலர் ஆர்.ரேணுகாதேவி, இளநிலை தொழில்நுட்ப அலுவலர் கே.உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment