30.06.2016, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உள்ளடங்கிய இடைநிலைக் கல்வித் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ஊர்வலம் கோவை கணபதி பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் கீதாஞ்சலி தலைமையில் ஆசிரியர்கள் உமா மகேஸ்வரி, ஹரிபிரியா, மணிமேகலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நகரின் முக்கிய வீதிகளைச் சுற்றி வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இத்திட்டம் குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
இந்தத் திட்டமானது பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடுகள், மனவளர்ச்சி, மூளை வளர்ச்சி, கற்றல் குறைபாடு உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி, 14 வயது முதல் 18 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வித் திறன் பயிற்சி அளிக்கப்படும். அவர்களுக்கு அடையாள அட்டை, சிறப்பு உபகரணங்கள், கல்வி உதவித் தொகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும். அத்துடன், மாற்றுத் திறன் கொண்ட மாணவர்கள் இடைநிலைக் கல்வியைப் பயின்றுவிட்டால் அதன் பிறகு உயர் கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மாற்றுத் திறனாளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment