25.05.2016, பெங்களூரு: மாற்றுத்திறனாளிகள் பெற்ற கடன் தொகை முற்றிலும் தள்ளுபடி செய்ய முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா தலைமையில் திங்கட்கிழமை அமைச்சரவை கூட்டம் நடந்தது .இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், ராமலிங்கரெட்டி , டிபி ஜெயச்சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு சட்டத்துறை அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா நிருபர்களிடம் கூறியதாவது: ஏழை-எளிய மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக அமைச்சரவையில் முக்கிய முடிவு எடுத்துள்ளோம்.
அரசு அலுவலகம், வீடற்ற ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுப்பதற்காக தனியாரின் அனுமதியுடன் 100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலத்தை அரசுக்கு வழங்கும் நபர்களுக்கு திருத்தப்பட்ட நில சட்டத்தின்படி உரிய நிவாரணம் வழங்கப்படும். மாநில அரசின் நில சட்டத்தின்படி இதற்கு முன்பு அரசு பயன்பாட்டிற்காக 5 ஏக்கர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்த இயலும். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி அரசு பயன்பாட்டிற்காக 100 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்ய முடியும்.
மத்திய அரசின் சட்டத்தை பயன்படுத்தி 100 ஏக்கர் நிலத்தை கொள்முதல் செய்ய அமைச்சரவையில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் 100 ஏக்கர் நிலத்தில் பஸ் நிலையம், மின்சார நிலையங்கள், கூட்டுகுடிநீர் திட்டங்கள், ரோடுகள், பாதாளசாக்கடை உள்ளிட்ட பல்வேறு பொது பயன்பாட்டு அலுவலகங்கள் அமைக்கப்படும். இதுதவிர மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாங்கிய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அரசின் இந்த முடிவின் காரணமாக ரூ.11.7 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படும்.
பெங்களூருவில் பயன்படுத்தப்பட்ட கழிவு நீரை மறுசுழற்சி செய்து அதை கோலார், சிக்கபள்ளாபுரா மாவட்டத்திலுள்ள 126 ஏரியில் நிரப்புவதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.148 கோடி செலவில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கலபுர்கி விமான நிலையம் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.88.73 கோடி, அங்கன்வாடியின் மூலம் குழந்தைகளுக்கு உணவு தானியங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இதற்கு தேவையான தானியங்கள் தனியாரிடம் இருந்து பெறப்படுவதை தவிர்த்து ஜனதா பஜாரில் அரசே நேரடியாக கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் டிபி ஜெயச்சந்திரா கூறினார்.
No comments:
Post a Comment