செங்கல்பட்டை அடுத்த மஹிந்திரா வேர்ல்ட் சிட்டியில் 8-ஆவது தேசிய ஒலிம்பிக் அறிவியல் போட்டிகளும், கண்காட்சியும் அண்மையில் நடைபெற்றன.
சொசைட்டி ஆப் ஆட்டோமொபைல் இன்ஜினீயர்ஸ் இந்தியா (எஸ்.ஏ.இ) அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் 5-ஆவது, 6-ஆவது வகுப்புகள் பயிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.எஸ்.ஏ.இ. அமைப்பின் தலைவர் அரவிந்த பரத்வாஜ் வரவேற்புரை ஆற்றினார். சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.
இந்தப் போட்டிகள் குறித்து அமைப்பின் நிர்வாகியும், டிவிஎஸ் லூக்காஸ் இணை நிர்வாக இயக்குநருமான அரவிந்த் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாணவர்கள் அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வதற்காக இத்தகைய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ராக்கெட் வடிவமைப்புக்குத் தேவையான அடிப்படை இயற்பியலை பயன்படுத்தி "ஜெட் டாய்' எனப்படும் பலூனினால் உந்தப்படும் வாகனம் வடிவமைத்தல், கப்பல் கட்டுமானத்தின் அடிப்படையான சிறு பாய் மரப் படகு தயாரித்தல் ஆகியவை மாணவர்களுக்கு போட்டிகளாக நடத்தப்பட்டன.
பார்ப்பதற்கு சிறு விளையாட்டுப் பொருள் போல தெரிந்தாலும், இதில் வாகனம் கடந்து செல்லும் தூரம், பலு தூக்கும் திறன், வேகம், உராய்வுத் தன்மை, காற்றுத் தடை, உந்துவிசை போன்ற முக்கியமான பெளதிக விதிகளை பின்பற்றி வடிவமைப்பது முக்கியமானதாகும்.
அப்படி வடிவமைக்கும் பொருள் குறித்து விரிவாக எடுத்துக் கூறி, அது செயல்படுத்தும் விதம் குறித்து சரியாகக் கூறினால் அந்த மாணவருக்கு முழு மதிப்பெண் கிடைக்கும்.
இவையனைத்தும் சரியாக அமைந்து சோதனைகளில் குறிப்பிட்ட கட்டளை விதிகளை கடக்கும் வாகனங்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
இந்தப் போட்டிகளில் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, அரசுப் பள்ளி மாணவர்களும், வாய் பேசாத, காது கேளாத மாணவர்களும் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளனர் என்றார் அரவிந்த் பாலாஜி.
No comments:
Post a Comment