21.01.2016, சென்னை,
சென்னையில் படித்து வேலையற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க தமிழக அரசு சார்பில் சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.கடன் வழங்கும் திட்டம்
சென்னை கலெக்டர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் குறுந்தொழில்களுக்கு 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுக்கு 5 ஆயிரம் இளைஞர்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் உள்ள தகுதியான இளைஞர்கள் அனைவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பயிற்சியில் இருந்து விலக்கு அளித்து 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரை கடன் வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
திட்டத்தின் மதிப்பில் 25 சதவீதம் அரசு மானியத்துடன் ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் வரை முறையே உற்பத்தி, சேவை, வியாபார தொழில் தொடங்கிட கடன் வழங்கப்படுகிறது.
இதில், முதலீட்டாளரின் பங்கு பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதமும், சிறப்பு பிரிவினருக்கு(பட்டியல் இனம், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சிறுபான்மையினர், மகளிர், முன்னாள் படைவீரர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்) 5 சதவீதமும் ஆகும்.
3 இடங்களில் நடக்கிறது
முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்பு திட்டத்தின் கீழ், சென்னையில் இளைஞர்கள் தொழில் தேர்வு சிறப்பு முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெற உள்ளது:-
* சென்னை கலெக்டர் அலுவலகம் கூட்ட அரங்கில் இன்று(வெள்ளிக்கிழமை) தண்டையார்பேட்டை, புரசைவாக்கம் தாலுகாவுக்கும், நாளை(சனிக்கிழமை) பெரம்பூர், அயனாவரம் தாலுகாவுக்கும் நடக்கிறது.
* சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 25-ந்தேதி, எழும்பூர், அமைந்தகரை தாலுகாவுக்கும், 27-ந்தேதி மயிலாப்பூர், வேளச்சேரி தாலுகாவுக்கும் நடக்கிறது.
* சென்னை கிண்டி தொழில் வணிகத்துறை மண்டல இணை இயக்குநர் அலுவலகத்தில் 28-ந்தேதி கிண்டி, மாம்பலம் ஆகிய தாலுகாவுக்கு நடக்கிறது.
மேலும் மாவட்டத்தின் அனைத்து பகுதியில் உள்ளவர்களும், இதர தாலுகாக்களில் உள்ளவர்களும் இந்த முகாம்களில் கலந்து கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு மண்டல இணை இயக்குநர், தொழில் வணிகத்துறை அலுவலகத்தை 044-22501620, 22501622 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
வயது, கல்வி தகுதி
சிறப்பு முகாமில் கலந்துகொள்ள 8-ம் வகுப்பு தேர்ச்சி, 18 வயது பூர்த்தி ஆகியவற்றுக்கு சான்றாக பள்ளி-கல்லூரி மாற்றுச்சான்றிதழ் அசல் மற்றும் நகல்கள், முகவரிக்கு குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை அசல் மற்றும் நகல்கள் ஆகியவற்றுடன் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment