27.01.2016, முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளிகளை, போராட்டம் நடத்த வந்ததாக கருதி, போலீசார் கைது செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற, அனைத்து மாற்றுத்திறன் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான, 3 சதவீத இட ஒதுக்கீட்டை, முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் மனு கொடுக்க, அனைத்து மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், 16 மாற்றுத் திறனாளிகள், நேற்று காலை, தலைமைச் செயலகம் வந்தனர்.அவர்கள் தலைமை செயலகம் முன், தவழ்ந்து செல்லும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் பரவியது.அதை நம்பி, தலைமைச் செயலகம் முன், பஸ்சில் இருந்து இறங்கிய, மாற்றுத் திறனாளிகள் 16 பேரையும், போலீசார் கைது செய்து, சமுதாய கூடத்தில் தங்க வைத்தனர். போலீசார், எதற்கு கைது செய்கின்றனர் எனத் தெரியாமல் தவித்த மாற்றுத்திறனாளிகளிடம், போலீசார், கைதுக்கான காரணத்தை தெரிவித்தனர்.அதை கேட்டு மாற்றுத் திறனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். மனு கொடுக்க வந்த விவரத்தை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மூன்று பேரை மட்டும், போலீசார் தலைமை செயலகம் அழைத்து சென்று, முதல்வர் அலுவலகத்தில், மனு கொடுக்க வைத்தனர்.கைதான மாற்றுத் திறனாளிகளுக்கு, குடிநீர், உணவு வழங்கப்படாததால், அவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment