30.12.2015, கோவை :'மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் நோக்கில், அளிக்கப்படும் மொபைல்போன் பழுது நீக்கும் பயிற்சியில் சேர, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் அதிகமான, கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு, அதிக உடல் உழைப்பில்லாத, லாபம் தரக்கூடிய, சுயதொழில் பயிற்சி அளிக்கும் நோக்கில், மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.இது, மூன்று மாத கால டிப்ள மோ பயிற்சியாக, தொழிற்கல்வி இயக்ககத்தின் மூலம், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில், 300 ரூபாய் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. இதில், 2014-15 ல், 332 பேர் மட்டுமே சேர்ந்து, பயிற்சி பெற்றுள்ளனர்.கோவை மாவட்டத்தில் இருந்து, இரு ஆண்டுகளாக, யாரும் விண்ணப்பிக்கவில்லை. இதற்கு, வங்கி கடன் பெறுவதில் உள்ள சிக்கலே காரணம் என, மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கூறப்படுகிறது.அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சதாசிவம் கூறுகையில், ''மொபைல் போன் பழுது நீக்கும் பயிற்சி, வேலை வாய்ப்பு அளிக்கும் திட்டம் தான். இருந்தாலும், பயிற்சி முடித்து, தொழில் துவங்க நினைப்போருக்கு, வங்கி கடன் இணைப்பு செய்தால் மட்டுமே, பயனடைய ஏதுவாக இருக்கும்.
''கூட்டுறவு சங்கங்களில், அரசு அதிகாரிகளின், ஜாமின் இருந்தால் மட்டுமே கடன் பெற முடியும். இதற்காக, அலைய வேண்டியுள்ளது. பெரும்பாலான தனியார் மொபைல்போன் நிறுவனங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதில்லை. இந்த முரண்பாடால், பலர் திட்டத்தில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதில்லை,'' என்றார்.
No comments:
Post a Comment