31.10.2015, ஜெய்ப்பூர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியா திரும்பிய கீதாவுக்கு 5 குடும்பத்தினர் உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் அவர் யாருக்கு சொந்தம் என்பதை அறிய டி.என்.ஏ பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அடையாளம் கண்ட பிறகு கடந்த திங்களன்று கீதா நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்து இருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் கீதா தங்களது மகள் என்று உரிமை கொண்டாடி உள்ளனர். இந்த நிலையில் 5 ஆவதாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தம்பதி கீதா தங்களது மகள்தான் என்று உரிமை கோரியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் சைமா குர்தத் கிராமத்தை சேர்ந்தவர் முகமதுகான் இவரது மனைவி ஹமிதி. இவர்கள் கீதா தங்களது மகள் என்று கூறியுள்ளனர். கீதா பற்றிய புகைப்படங்கள் பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இந்த புகைப்படத்தை அந்த தம்பதியினர் படத்தில் இருக்கும் கீதா தங்களது மகள் என்று மாவட்ட நிர்வாகத்தை அனுகி உரிமை கோரியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும் போது, "வாய் பேச முடியாத, காது கேளாத தங்களது மகள் ஹன்சிரா 8 வயதாக இருக்கும் போது 2003 இல் காணாமல் போனார். கீதாவின் முகச்சாயலில் காணாமல் போன எனது மகளோடு ஒத்து போகிறது. மற்ற விஷயங்களும் ஒத்துபோகிறது எனவே கீதா எங்களது மகள்" என்று தெரிவித்துள்ளனர். தற்போது 5 குடும்பத்தினர் கீதாவுக்கு உரிமை கொண்டாடி வருகின்ற காரணத்தினால் இதில் யாரது மகள் கீதா என்பதை அறிய மரபணு சோதனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment