கிருஷ்ணகிரியில் வருகிற 18-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
விளையாட்டு போட்டிகள்
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அலுவலரும், இளைஞர் நலன் அலுவலருமான சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் மற்றும் குழுப் போட்டிகளை வருகிற 18-ந் தேதி காலை 9 மணிக்கு நடத்துகின்றன.
அதன்படி கை, கால் ஊனமுற்றோர் பிரிவில் கால் ஊனமுற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதல் போட்டியும், இரு கால்கள் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும், கை ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டப் போட்டியும், குள்ளமானோருக்கு 50 மீட்டர் ஓட்டப் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு இறகுப்பந்து (ஒற்றையர் மற்றும் இரட்டையர்), மேசைப்பந்து ஆகிய குழு போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
போட்டிகள்
பார்வையற்றோர் பிரிவில் மிக குறைந்த பார்வையற்றோருக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலை தாண்டுதல், மெதுபந்து எறிதல் ஆகிய போட்டிகளும், முற்றிலும் பார்வைற்றோருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், இவ்வகையை சேர்ந்தவர்களுக்கு குழுப் போட்டியாக கைப்பந்து போட்டியும் நடத்தப்படுகின்றன. மேலும், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் 50 மீட்டர் ஓட்டம், மெதுபந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகளும், ஐக்கு தன்மை நல்ல நிலையில் இருப்பவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம் மற்றும் குண்டு எறிதல் போட்டியும், குழு போட்டியாக எறிபந்து போட்டியும் நடைபெறும். காது கேளாதோர் பிரிவினருக்கு 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகளும், குழுப் போட்டியாக கபடி போட்டியும் நடத்தப்படுகிறது.
தடகள போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கும், குழுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறுபவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment