07.11.2015, மதுரை, : மாற்றுத்திறனாளி என போலியாக சான்றிதழை சமர்ப்பித்து, அரசு பணிகளில் சேர்ந்தோர் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம், நாரணம்மாள்புரத்தை சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் என போலியாக சான்றிதழ் சமர்ப்பித்து, பலர் அரசுப் பணிகளில் சேர்ந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, நெல்லை அரசு மருத்துவமனை போலீசார் 108 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற முறைகேடு தமிழகம் முழுவதும் நடந்ததாக கூறப்படுகிறது. பலரும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் போலியாக மாற்றுத்திறனாளி சான்று பெற்று பணியில் சேர்ந்தவர்களை மருத்துவக் குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதில் முறைகேடு கண்டறியப்பட்டால், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.
மனுதாரர் சார்பில் வக்கீல் ஆர்.அழகுமணி ஆஜரானார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ‘பொதுவாக குறிப்பிட்டு மனு செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகளின் விபரங்களை தெளிவாக குறிப்பிட்டு, கூடுதல் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர். விசாரணையை நவ. 17க்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment