இதைத் தொடர்ந்து சென்னை காவல்துறை இணை ஆணையர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் காமராஜர் சாலையில் மறியல் செய்ய முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்று அடைத்தனர். இதைத் தொடர்ந்து, மற்றொரு சங்கத்தினர் வேளாண்துறை அலுவலகம் வழியாக முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் 4 அமைப்புகளை சேர்ந்த மாற்று திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தனர். இதனால் அங்கிருந்து அவர் வெளியேறினார். இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் வெளியே செல்ல முடியாதபடி எழிலகத்தின் அனைத்து பக்கங்களும் மூடப்பட்டன. எதற்காகவும் அவர்களை வெளியே விட போலீசார் மறுத்து சட்டத்துக்கு புறம்பாக 8 மணிநேரத்துக்கும் மேல் சிறை வைத்தனர்.இந்நிலையில் எழிலகத்தின் ஒரு பகுதி கேட்டை திறந்து வெளியே வந்த மாற்றுத்திறனாளிகளில் ஒரு பிரிவினர் மாலை 4 மணியளவில் காமராஜர் சாலையில் மறியல் செய்தனர்.
கூடுதல் கமிஷனர் சங்கர் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, எங்களை கைது செய்யுங்கள் அல்லது தலைமை செயலாளரை சந்திக்க அனுமதி பெற்று தாருங்கள், இது போன்று அடைத்து வைத்து சித்ரவதை படுத்தாதீர்கள் என்று சங்கத்தினர் கூறினர். இதை தொடர்ந்து நேற்று இரவு 8 மணியளவில் 1000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
No comments:
Post a Comment