12.02.2016, கடலூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவித்தொகை
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த ஜனவரி முதல் அடுத்த மாதம்(மார்ச்) வரை முடிவடையும் காலாண்டுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது.
மனுதாரர் உடல் உறுப்பு நலம் குன்றியவராக அல்லது செவிபுலன் இழந்தவராக இருந்து தமது கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுக்கு மேல் உயிர் பதிவேட்டில் காத்திருப்பவராக இருத்தல் அவசியம். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கான வயது வரம்பு 45. மற்றவர்கள் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும். அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருக்க கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக்கொண்டிருக்க கூடாது. ஆனால் தொலைதூர கல்வியின் மூலம் படிப்பவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே படித்து இருக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை
இந்த விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை முதலியவற்றுடன் நேரில் அலுவலகம் வந்து அதற்கான விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு செய்தவர்கள் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த அனைவருக்கும் தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசால் வழங்கப்படும்.
விண்ணப்ப படிவம்
எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ்-2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும். விண்ணப்ப படிவம் தினமும் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை வினியோகம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்கள் திரும்ப பெறப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்றுவரும் பயனாளிகள், ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment