தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டதால் கடந்த 4 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
40 சதவீத உடல் உறுப்பு குறைபாடு இருந்தால் உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகியவை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதில் முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், சில கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற கண்காணிப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகவும் தமிழக முதல்வர் சனிக்கிழமை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கத்தினர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த 4 நாட்களாக கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 400 பேர் வெற்றி முழக்கமிட்டு முதல்வரின் அறிவிப்பை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
'40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்பால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளூக்கு உதவித் தொகை பெற்று பயனடைவர்' என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் டி.எம்.என்.தீபக் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு வரை செல்வதற்கான வாகன வசதியை போலீஸார் செய்து கொடுத்தனர். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2 நாட்களாக நடிகர் விசால் உணவு ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என மாற்றுத் திறனாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment