09.02.2016, சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் சிறை வைத்தனர். இரவு முழுவதும் விடிய விடிய அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் நேற்று காலை 10 மணியளவில் சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் காமராஜர் சாலையில் அமர முற்பட்டனர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் கொண்டு சென்றனர்.
இதைத் தொடர்ந்து, வேளாண்துறை அலுவலகம் வழியாக அனைத்து வகை மாற்று திறனாளிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் விருந்தினர் மாளிகை வளாகத்தில் முற்றுகையிட வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்நிலையில் 4 மாற்று திறனாளிகள் சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். மதியம் 1 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த வந்திருந்தார்.
அப்போது, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் உங்களது ஆணையரிடம் பல முறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தலைமை செயலாளரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம், நீங்கள் செல்லலாம் என்று தெரிவித்தார். இதை தொடர்ந்து அங்கிருந்து துணை இயக்குனர் வெளியேறினார். இதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தராததை கண்டித்து மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.அப்போது, போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஒரு பிரிவினர் மாலை 4.22 மணியளவில் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும் படி போலீசார் எச்சரித்தனர். யாரும் கலைந்து செல்லதாததால் எழிலகம் வளாகத்தில் அவர்களை வலுக்கட்டாயமாக தள்ளி நுழைவு வாயிலை இழுத்து மூடினர். பின்பு நுழைவு வாயில் கதவை கயிறால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிறை வைத்தனர். தொடர்ந்து, மாற்று திறனாளிகளிடம் போராட்டத்தை கைவிடும்படி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டக்காரர்கள் யாரும் இதற்கு உடன்படவில்லை.
இதை தொடர்ந்து. நேற்றிரவு 8 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். இதை தொடர்ந்து, போராட்டக்காரர்களை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.இருப்பினும், போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டபத்திற்குள்ளேயே தொடர்ந்து முழக்கமிட்டு கொண்டிருந்தனர். மேலும், நேற்று இரவு முழுவதும் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
No comments:
Post a Comment