FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 9, 2016

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம் - சாலை மறியல்

சென்னை, பிப்.9-
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் முக்கிய சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் ஆகிய 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 8 மணியில் இருந்தே முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்லும் காமராஜர் சாலையில், மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காக, அங்கு சாலையில் இரண்டு புறங்களிலும், எழிலக வளாகத்திற்குள்ளும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 10 மணி அளவில் டிசம்பர் 3 இயக்கத்தின் மாநில தலைவர் தீபக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் காமராஜர் சாலையில் அமர முற்பட்டனர். அதற்குள் போலீசார் விரைந்து வந்து, அவர்களை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்துக்குள் ஆவின் பாலகம் நுழைவு வாயில் வழியாக அழைத்துச்சென்றனர்.

இதைத் தொடர்ந்து, வேளாண்மைத்துறை அலுவலகம் வழியாக விருந்தினர் மாளிகை வளாகத்தில் முற்றுகையிட அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் வந்தனர். அவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் தடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழிலகம் வளாகத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசுக்கு எதிராகவும், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மதியம் 1 மணியளவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை துணை இயக்குனர் ரவீந்திரநாத் சிங் பேச்சுவார்த்தை நடத்த வந்தார். அப்போது, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் பேச மறுப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு தலைமை செயலாளரிடம் தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து துணை இயக்குனர் வெளியேறினார்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை வெளியே செல்ல விடாமல் நான்கு நுழைவு வாயிலும் அடைக்கப்பட்டது. மேலும், பேச்சுவார்த்தைக்கு யாரும் வராததாலும், கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்தும் அவர்கள் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

ஆனால், போலீசார் கேட்டை திறக்க மறுத்தனர். இதனால், மாற்றுத்திறனாளிகள் கயிறால் கட்டப்பட்டிருந்த கேட்டை இழுத்து திறக்க முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இடையே மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சிலர் காமராஜர் சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து வேப்பேரி ஈ.வெ.கி. சம்பத் சாலையில் உள்ள மராட்டிய மண்டல் மண்டபத்தில் அடைத்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு முழுவதும் போதிய உணவு மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல் இங்கு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய நூற்றுக்கணக்கான மாற்றுத் திறனாளிகள் இன்று பிற்பகல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கும் மறைந்த ஈ.வெ.கி. சுலோச்சனா சம்பத் இல்லத்துக்கும் இடையில் உள்ள சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அந்த முக்கிய சாலையில் போக்குவரத்து முழுமையாக ஸ்தம்பித்தது. இதுதொடர்பான தகவல் அறிந்து அவர்களை சமரசம் செய்துவைக்க வந்த போலீஸ் உயரதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட போராட்டக் குழுவினர், ஒன்று எங்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது, எங்களை சிறைக்கு அனுப்ப வேண்டும். அதுவரை இந்தப் போராட்டத்தை நாங்கள் தொடருவோம், கைவிட மாட்டோம் என கூறி சாலை மறியலை கைவிட மறுத்து விட்டனர்.

இந்த போராட்டத்தின் விளைவாக ஈ.வெ.கி. சம்பத் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. ஏராளமான போலீசாரும், ஊடக நிருபர்களும் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பு நிலவி வருகின்றது.

No comments:

Post a Comment