09.10.2015, சென்னை, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், அரசு சார்பில் வரும் 17-ம் தேதி சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் மிக பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அனைவருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், தமிழக அரசு சார்பில், அதற்கான முகாம்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, வரும் 17-ம் தேதி மிக பிரமாண்டமான வேலைவாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள். பா. வளர்மதி, .ப.மோகன்,. கோகுல இந்திரா, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவை குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கவிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட தொழில் மையம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற பல்வேறு துறைகள் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் பயிற்சிகள், உதவிகள் பற்றிய அரங்குகள் இந்த மாநாட்டில் அமைக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் மூலம், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப் படிப்பு வரை படித்துள்ள சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வுக்கூட்டத்தைத் தொடர்ந்து, ஆர்.கே. நகரில் முகாம் நடைபெறவிருக்கும் இடத்தை அமைச்சர்கள் பா. வளர்மதி,.ப.மோகன்,. கோகுல இந்திரா, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment