தேனி, 10 October 2015
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்படும் விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் பெறுவதற்கு, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 2015-16 ஆம் ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது.
தையல் எந்திரம் பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டு இருக்கவேண்டும். அரசு திட்டங்களின் கீழ் விலையில்லா தையல் இயந்திரம் பெற்றிருக்கக் கூடாது.
தையல் பயிற்சி சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, வயது சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைபடம் ஆகியவற்றுடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், ஆட்சியர் அலுவலக வளாகம், தேனி என்ற முகவரிக்கு, அக்டோபர் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம்:அதேபோன்று, தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சி ஒன்றிப் பகுதிகளில் வசிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதி திராவிடர்கள் தங்களது குடும்ப உறுப்பினர் இறப்புக்கு ஈமக்கிரியை மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, மானியமாக அரசு சார்பில் ரூ.2,500 வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கு ஈமக்கிரியை மானியம் வழங்க மொத்தம் ரூ. 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மானியம் பெற விரும்புவோர், சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்தில் உரிய படிவம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment