27.10.2015,
இந்தியாவை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத கீதா 8 வயது சிறுமியாக இருக்கும்போது வழிதவறி பாகிஸ்தானுக்கு சென்று விட்டார்.லாகூர் ரெயில் நிலையத்தில் கீதாவை மீட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் போலீசில் ஒப்படைத்தனர். அங்குள்ள ஒரு அறக்கட்டளை கீதாவை பாதுகாத்து வளர்த்தது.
கீதாவுக்கு தற்போது 23 வயது ஆகிறது. நடிகர் சல்மான்கான் நடித்த ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ இந்தி படம் பாகிஸ்தானில் வெளியான பின்னர் கீதாவின் கதை வெளியுலகுக்கு தெரிய வந்தது.
அவர் மீது பரிதாபப்பட்ட பாகிஸ்தான் அரசாங்கம் கீதாவின் பெற்றோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இறுதியில் அவளது பெற்றோர் பீகாரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகு கீதா நேற்று இந்தியா அழைத்து வரப்பட்டார்.
பீகாரில் உள்ளவர்கள் கீதாவின் பெற்றோர்களா? என்பது அறிய அவரது தந்தையின் ரத்தம் மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைககு அனுப்பப்பட்டு உள்ளது. இதேபோல் கீதாவின் ரத்த மாதிரி டி.என்.ஏ. பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது.
இதன் முடிவுகள் தெரிந்த பிறகே கீதா அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார்.
இதற்கிடையே இந்தியா திரும்பிய கீதா எங்களது மகள் என்று தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு தம்பதி சொந்தம் கொண்டாடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் சம்மம் மாவட்டம் படமடா நரசாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா– கோபம்மா தம்பதிகள் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர்கள் கூறியதாவது:–
பாகிஸ்தானில் இருந்து திரும்பிய கீதா என்ற பெண் எங்களது மகள் ராணி. கடந்த 8–ந்தேதி பத்திரிகையில் அவள் புகைப்படத்தை பார்த்தபோதே அவர் எங்களது மகள் என்று தெரிந்து கொண்டோம்.
15 வருடங்களுக்கு முன் 7 வயது இருக்கும்போது அவள் காணாமல் போய் விட்டாள். அப்போது அவளுக்கு சரியாக பேச்சு வராது. கீதாவின் கண், மூக்கு, முகச்சாயல் எனது மகள் ராணிபோல் உள்ளது.
நாங்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் டெல்லி சென்று எனது மகளை பார்க்க முடியாமல் இருக்கிறோம். முதல்–மந்திரியோ, அரசியல் தலைவர்களோ எங்களுக்கு உதவி செய்து எனது மகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.
கீதா எங்கள் மகள் என்பதை நிரூபிக்க நாங்கள் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உள்பட தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க கூறினார்கள். தங்களது மகளின் சிறிய வயது புகைப்படத்தை அவர்கள் நிருபர்கள் மத்தியில் காட்டினார்கள்.
கிருஷ்ணய்யா தம்பதிகளுக்கு உதவி செய்ய நரசாபுரம் பஞ்சாயத்து தலைவர் மோகன்ராஜ் உதவி செய்ய முன்வந்து உள்ளார்.
No comments:
Post a Comment